சேலத்திலிருந்து சென்னைக்கு அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த பெயர் பலகையை உடைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தனியார் நிறுவன பாதுகாவலர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்திலிருந்து சென்னை நோக்கி கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த கார், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேலம் பிரிவு சாலையை வந்தடைந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை உடைத்துக்கொண்டு வேகமாக பாய்ந்த கார், அப்போது சாலையை கடக்க காத்திருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒடபன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவரது காலில் முறிவு ஏற்பட்டதுடன் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த மணிகண்டனை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், விபத்துக்குள்ளான கார் தேசிய நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் நின்றதால் சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விபத்திற்கான காரணம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment